சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்.. அனைவரையும் கவர்ந்த வான் சாகச நிகழ்ச்சி..!
ஆசியாவின் மிகப் பெரிய 'ஏரோ இந்தியா' சர்வதேச விமான கண்காட்சியை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி நடைபெற்ற போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் வான்சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது....
பாதுகாப்புத்துறை சார்பில் 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் 1996ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விமான கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதன்படி14வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியையொட்டி பல்வேறு ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுத்ததை பிரதமர் கண்டு ரசித்தார்.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரசாந்த் இலகு ரக ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுப்பு நடத்தின.
போர் விமானத்தை இயக்கிய இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.செளத்ரி, குருகுல அமைப்பில் விமானங்களின் வான் அணிவகுப்பை வழிநடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, விமானப்படையின் சூர்யகிரண் குழுவினர் வான் சாகசத்தில் ஈடுபட்டனர். வீரர்களின் பல்வேறு சாகசங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்தது
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவின் புதிய பலத்தையும், திறமையையும் விமான கண்காட்சி பிரதிபலிப்பதாக கூறினார்.
இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி தளமாக மாறும் என குறிப்பிட்ட பிரதமர், 2024-25ஆம் ஆண்டிற்குள் தளவாட ஏற்றுமதியை 5 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
32 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், 29 நாடுகளின் விமானத் தளபதிகள் விமானக் காட்சியில் பங்கேற்கின்றனர். கண்காட்சியின் முதல் நாளில் இலகு ரக தேஜாஸ் போர் விமானம், ஹெச்டிடி-40 போன்ற உள்நாட்டு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
உள்நாட்டு உபகரணங்கள், தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலும் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விமானக் கண்காட்சியில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு வரலாம் என்றும் தளவாட ஒப்பந்தங்கள் தொடர்பாக 251 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments