ஏடிஎம்மில் ரூ.75 லட்சம் கொள்ளை.. 9 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை நெருங்கிய போலீஸ்..!

0 1867

திருவண்ணாமலை ஏடிஎம் தொடர் கொள்ளை குறித்து தேவையான துப்பு கிடைத்துள்ளதால் 2 அல்லது 3 நாட்களில் கொள்ளை கும்பலை நெருங்கி விடுவோம் என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் 3 எஸ்பிஐ ஏடிஎம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டர் மூலம் உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பிய ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சுமார் 400 கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் பெர்டோ (perto) வகை ஏடிஎம் மிஷின்களை மட்டுமே குறி வைத்து கொள்ளை நடந்திருப்பதும், ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காகவே வடமாநிலத்தில் ஜம்தாரா என்ற இடத்தில் பயிற்சி பெற்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள், ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் ஏடிஎம் உள்ளே புகுந்து சிசிடிவி கேமராக்களில் கருப்பு மை பூசி விட்டு, கேஸ் கட்டர்களால் ஏடிஎம் மிஷின்களை வெட்டி பணத்தை கொள்ளையடிப்பதோடு, கைரேகை சிக்கக் கூடாது என்பதற்காக இயந்திரத்தை தீயிட்டு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொள்ளை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை வடக்கு மண்டல ஐஜி கண்ணன், ஏடிஎம் அலாரம் ஒலிக்காத வகையில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments