மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ரமேஷ் மாணவர்களுக்கு வேதியியல் பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது.
இவர் கடந்த மாதம் 7-ஆம் தேதி 3 மாணவிகள், 2 மாணவர்களை பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் தனது காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஹோட்டலில் மாணவ -மாணவிகளை ஒரு அறையில் தங்க வைத்து விட்டு, அவர் வேறொரு அறையில் தங்கியதாகவும், அதில் ஒரு மாணவிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால், செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக அவர் மாணவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் வேதியியல் ஆய்வக அறையில் அதே மாணவியுடன், ரமேஷ் தனிமையில் இருந்ததை மாணவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.
பள்ளி நிர்வாகம் இது குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வகாத்திற்கு அளித்த புகாரின் பேரில், சமூக நலன், கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாலியல் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கீரனூர் மகளிர் போலீசார் ரமேஷின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்றிரவு அவரை கைது செய்தனர்.
Comments