4 ஏடிஎம்-களை உடைத்து கொள்ளை.. வெல்டிங் கொள்ளையர்கள் கைவரிசை..!
திருவண்ணாமலை மாவட்டத்தில், நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் ஒரு இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து, 75 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில், கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெரு, போளூர் பேருந்து நிலையம் மற்றும் தேனிமலை ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் கொள்ளை நடைபெற்றுள்ளது.
நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள், ஷட்டரை மூடிவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி உடைத்துள்ளனர். பின்னர் அதிலிருந்த லட்சக்கணக்கிலான பணத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.
மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் இருந்து சுமார் 20 லட்ச ரூபாயும், தேனிமலை ஏடிஎம்மில் இருந்த 32 லட்ச ரூபாயும், போளூரில் இருந்த ஏடிஎம்-ல் இருந்து 18 லட்ச ரூபாயும் கொள்ளையடித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்தையும் உடைத்த மர்ம நபர்கள், அதில் வைக்கப்பட்டிருந்த மூன்று லட்ச ரூபாயை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
மேலும், கைரேகை மற்றும் வீடியோ பதிவை வைத்து போலீசார் தங்களை கண்டறியக்கூடும் என எண்ணிய கொள்ளை கும்பல், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர். இதில், சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் சேதமடைந்துள்ளது.
சுமார் 75 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஏடிஎம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments