துருக்கி: தொடரும் அவலம்
துருக்கி மற்றும் சிரியாவில் 5-வது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், அங்கு பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஐந்து நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க, பல்வேறு நாடுகளின் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், பனிப்பொழிவு நீடித்து வருவது மீட்புப் படையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதனிடையே, துருக்கியின் தியார்பக்கிர் நகரில் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியிருந்த 6 வயது சிறுவன் சுமார் 80 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டான்.
ஹாத்தே நகரில் மீட்புப் பணி மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த சீனாவைச் சேர்ந்த குழுவினர் 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். உயிரிழந்த நிலையிலும் சிலரின் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர்.
காஸியான்டப் மாகாணத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் ஏராளமான மீட்பாளர்கள் பங்கேற்றனர்.
ஹாத்தே மாகாணத்தில் உள்ள பெரிய நகரமான அன்டாகியாவில் உள்ள மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் 200க்கும் மேற்பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘
துருக்கியின் இஸ்கெண்டருன் மாகாணத்தில் நிலநடுக்கத்தின் விளைவாக கடல் நீரின் மட்டம் 200 மீட்டர் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சேறு, சகதி நிறைந்த கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
சிரியாவின் ஜண்டாரிஸ் மாகாணத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த குழந்தையை கடுமையாகப் போராடி மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
வடமேற்கு சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், அங்கு நிவாரண உதவிகள் செல்லத் தொடங்கி உள்ளன. இதனிடையே, நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை தருமாறு இந்தியாவுக்கு சிரியா கோரிக்கை விடுத்துள்ளது.
Comments