மனசுல ராக்கிபாயின்னு நெனப்பு.. கடலில் வீசிய 17.750 கிலோ தங்கக் கட்டிகளை மீட்டது எப்படி? சாதித்த பெண் ஸ்கூபா வீராங்கனை..!

0 8205

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 17 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை , இந்திய கடலோர காவல் படை கப்பலைக் கண்டு பயந்து போய் கடத்தல்காரர்கள் கடலுக்குள் வீசிய நிலையில், 2 நாட்கள் தேடுதல் வேட்டையின் முடிவில் கடற்படை வீராங்கனையால் அத்தனை தங்க கட்டிகளும் மீட்கப்பட்டன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கக் கட்டிகள் நாட்டுப்படகில் மண்டபம் அடுத்துள்ள வேதாளைக்கு கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் மீன் பிடி துறைமுகப் பகுதியையொட்டிய தெற்கு கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடத்தல்காரர்களின் படகை எதிர்பார்த்து காத்திருந்த போது, நாட்டுப் படகு ஒன்று வந்த திசையை மாற்றி திரும்பிச் செல்வதை கண்டு கப்பலில் இருந்து சிறிய ஸ்பீடு படகில் விரட்டிச் சென்றனர். இதையடுத்து அந்த நாட்டுப்படகில் இருந்து பார்சல் ஒன்று கடலுக்குள் வீசப்பட்டது. அதற்குள்ளாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் அந்த நாட்டுப்படகை மடக்கினர்.

அதில் இருந்த மண்டபத்தை சேர்ந்த நாகூர் கனி, ஷாகுபன் சாதிக், சபீர் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கடலுக்குள் தங்க கட்டி பார்சலை வீசியதை ஒப்புக் கொண்டனர். கடல் சீற்றமாகவும் தெளிவில்லாமலும் இருந்ததால் கடலுக்குள் வீசப்பட்ட தங்ககட்டி பார்சலை காண இயல வில்லை.

தங்களிடம் விசேஷ வலை இருப்பதாகவும், அதனை வைத்து தங்க கட்டியை எடுத்து தருவதாகவும் கடத்தல் காரர்கள் சொன்ன நிலையில் அவர்கள் மீது நம்பிக்கையில்லாமல், கடற்படை ஸ்கூபா வீரர்களை வரவழைத்து தங்கக் கட்டியை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. புதன் கிழமை நடந்த தேடுதல் பணியில் தங்கம் கிடைக்கவில்லை

இரண்டாவது நாளாக தேடுதல் பணி தொடங்கிய போது வீசப்பட்ட இடத்திலேயே கிடக்குமா ? அல்லது நீரோட்டத்தில் வேறு இடத்திற்கு சென்று இருக்குமா ? என்று எல்லாம் அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில் கடற்படையைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஜூனா ஓரம் களமிறக்கப்பட்டார்.

இந்திய கப்பல்படையில் நீருக்கு அடியில் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து கடலுக்குள் இறக்கினர். அடுத்த சில மணி நேரங்களில் கடலுக்கு அடியில் இருந்து தங்க கட்டி பார்சலை பத்திரமாக மீட்டுக் கொடுத்தார். அதனை கரைக்கு கொண்டு வந்து பிரித்து பார்த்த போது அந்த பெரிய பார்சலுக்குள் பிளாஸ்டிக் டேப் சுற்றிய 14 சிறிய பார்சல்கள் இருந்தன.

அந்த சிறிய பார்சல்களை பிரித்து பார்த்த போது அதற்குள் தங்க கட்டிகள், தங்க கம்பிகள் , தங்க சங்கிலி என மொத்த 17 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது.

இதையடுத்து தங்ககட்டிகளை கைப்பற்றிய மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள், துபாயில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கடத்தி வந்து அங்கிருந்து தமிழகத்துக்கு நாட்டுப் படகில் தங்கத்தை பார்சலாக கட்டி எடுத்து வந்ததாக நாகூர்கனி, ஷாகுபன் சாதிக், சபீர் ஆகிய 3 பேரை கைது செய்து இந்த தங்கம் யாருக்காக கடத்திவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை முன் எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments