வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்..!
காலநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாகவும், அதனால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும்குளிர் காரணமாக கொசுக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி மற்றும் புகை பரப்பும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொசுத் தொல்லை தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வைரல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தட்பவெப்ப மாற்றத்தின் காரணமாக வைரஸ் கிருமிகள் தனது நிலையை மாற்றிக் கொள்வதால் டெங்கு, எலிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்றவை ஏற்படுவதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், மருத்துவர்களை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருந்தகத்தில் தாமாக மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் சோர்வு, தலைவலிக்கு பாராசிட்டமால் மாத்திரை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதிகமாக உட்கொண்டால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் ஆரோக்கியமான காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுய தனிமை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Comments