குடும்ப சண்டையை விசாரிக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து..!
சென்னை வேளச்சேரியில் காதல் கலப்பு திருமணம் செய்த பெண்ணை தாக்கியது குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை கூர்மையான ஆயுதத்தால் குத்திய பெண்ணின் அண்ணனை, ரத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், காவல் உதவி ஆய்வாளர் பிடித்துள்ளார்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஷாலினி, சில ஆண்டுகளுக்கு முன், வீரமணி என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், அவருடன் பேசாமல் இருந்த அவரது குடும்பத்தினர், அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஷாலினியை, அவரது அண்ணன் சதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் தாக்கியதால் சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் அருண் அங்கு சென்று சதீஷை விசாரணைக்காக அழைத்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த சதீஷ் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தால், அருணின் தோள்பட்டையில் குத்திவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார்.
காயத்தையும் பொருட்படுத்தாமல், சதீஷை உதவி ஆய்வாளர் அருண் பிடித்த நிலையில், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments