காத்துவாக்குல 2 கல்யாணம் கடத்தப்பட்ட பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவு..! யாருடைய செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது ?

0 3926

தென்காசியில் கடத்தப்பட்ட பெண், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை குஜராத்தில் திருமணம் செய்த நபரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அந்தப்பெண்ணை 3 நாட்கள் காப்பகத்தில்
தங்க வைத்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டனர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட வினீத் - கிருத்திகா தம்பதியரை விரட்டிய , பெண்ணின் பெற்றோர் கிருத்திகாவை கடத்திச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட கிருத்திகாவை வைத்து வீடியோ மட்டும் வெளியிட்டு வந்த நிலையில், சென்னையில் மென்பொறியாளராக உள்ள வினீத், தனது காதல் மனைவி கடத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞர் பாதுகாப்புடன் நேரடியாக ஆஜரானார் கிருத்திகா.

நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில், கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்டதில் இரு வேறு கதைகள் உள்ளதாக கூறப்பட்டது. மேலும் உண்மையை கண்டறிய சம்மந்தப்பட்ட பெண், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க ஆவண செய்ய வேண்டும், அதன் பின்னரே உண்மை தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், வினீத் கல்யாணம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளதா? வினீத்தின் வயது என்ன? என்று கேள்வி எழுப்பினார். வினீத்திற்கு 22 வயது என்றும், வினீத்துக்கும், கிருத்திகாவுக்கும் கல்யாணம் நடந்ததற்கான புகைப்பட ஆதாரமும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், குஜராத்தில் திருமணம் செய்த மைத்திரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா? என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். காவல் துறை தரப்பில், அவர் தலைமறைவாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கடந்த அக்டோபர் மாதம் மைத்திரிக் உடன் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாரியப்பன் வினித் உடனான திருமண புகைப்படங்களை காட்டி கிருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை செய்தனர்.

அதன்பின்பு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்

* கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

* குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும்.

* கிருத்திகா-வை 3 நாட்கள் காப்பகத்தில் வைத்து அதன்பின், வாக்கு மூலம் பெற வேண்டும் என்றும், கிருத்திகா-வின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் தெரிவித்தனர்.

* பெற்றோர், கிருத்திகா-வை பார்க்க அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அதன் பின்னர் விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

வரும்போது வழக்கறிஞர் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்த கிருத்திகாவை போலீசார், தங்கள் வாகனத்தில் ஏற்றி காப்பகத்திற்கு அழைத்துச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments