எங்க போனாலும் பணம் கேக்குறாங்க.. கஷ்டத்தை சொல்லி கலெக்டர் காரின் முன் அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுத பெண்...
இலவச வீட்டு மனை பட்டா மற்றும் சத்துணவு சமையலர் பணி தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்க கோரி, ஆட்சியரின் கார் முன் அமர்ந்து அழுது, ஆர்ப்பாட்டம் செய்த கைம்பெண்ணை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின், அங்கு அழுதபடி வந்த பெண் ஒருவர், தான் ஆட்சியரை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
மயக்கமடையும் நிலைக்கு சென்ற அப்பெண்ணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆசுவாசப்படுத்தினர். சத்துணவு சமையலர் பணி வழங்க கோரி தான் மனு அளிக்க வந்ததாக அப்பெண் தெரிவித்தார்.
மேலும், தான் கலப்புத்திருமணம் செய்து கொண்ட நிலையில், 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொலைப்பேசியில் தகவல் தெரிவித்ததாகவும், ஆட்சியர் அலுவலகத்தில் வந்து கேட்டபோது, அப்படி எந்த திட்டமும் இல்லை எனக்கூறியதாகவும் அப்பெண் தெரிவித்தார்.
Comments