நீங்க ரூ.800 க்கு பன்றீங்கோ... நாங்க ரூ.550 க்கு பன்றோம்… தேங்காய் உரிப்பதிலும் போட்டி..! வடக்கால் முடங்கிய உள்ளூர் தொழிலாளர்கள்
உடுமலை அருகே வட மாநில தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், தங்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி, தேங்காய் வண்டிகளை மறித்து உள்ளூர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தேங்காய் உரிக்கும் பணிகள் செய்து வருகின்றனர்.
தேங்காய் ஒன்றுக்கு 80 பைசா வீதம் ஆயிரம் தேங்காய் களுக்கு 800 ரூபாய் என்ற கணக்கில் வேலை செய்து வந்த நிலையில் தற்போது தேங்காய் விலை வீழ்ச்சியால் தேங்காய் வியாபாரிகள் முன்பு இருந்த கூலியில் இருந்து பத்து பைசா குறைப்பது என்று முடிவு எடுத்திருந்தனர். கூலி குறைப்பை கண்டித்து உள்ளூர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பல நாட்களாக அதிக அளவில் தேங்காய்கள் தேங்கி கிடப்பதால் வியாபாரிகள் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு தேங்காய் ஒன்றிற்கு 55 பைசா வீதம் ஆயிரம் தேங்காய் களுக்கு 550 ரூபாய் வீதம் அவர்களுக்கு சம்பளம் வழங்கி பணியில் அமர்த்தப்பட்டனர். இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியானது
வட மாநில தொழிலார்கள் உரித்த தேங்காய்களை, தோப்பு உரிமையாளர்கள் வெளியே எடுத்து செல்லாதபடி மறித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை அடுத்த ஆண்டியூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் பணியில் வெளிமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளுர் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு கொண்டுசெல்வதை யாரும் தடுக்க கூடாது, அவ்வாறு தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வியாபாரிகள் தரப்பில் மனு அளிக்கபட்டது.
இதனிடையே உடுமலை அடுத்த கரட்டுமடம் பகுதியில் தனியார் மண்டபத்தில் வெளிமாநில தொழிலாளர்களை தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தபட்டது.
தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி தேங்காய் உரிக்கும் பணியை செய்வதாக வியாபாரிகள் கூறிவந்த நிலையில், ஒருவாரத்திற்கு தேங்காய் பறிக்கும் பணியை நிறுத்திவைக்க முடிவு எடுக்கபட்டுள்ளது.
Comments