துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இரு நாடுகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
துருக்கியின் நுர்டாகி நகருக்கு அருகே சுமார் 18 கிலோ மீட்டர் ஆழத்தில், 7 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது.
இதனை தொடர்ந்து, துருக்கியில் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. இரவில் உலுக்கிய நிலநடுக்கத்தால், குடியிருப்பு கட்டடங்கள் விழுந்து, உறக்கத்திலேயே பலர் உயிரிழந்தனர். துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு, மொத்தம் 2 ஆயிரத்து 379 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
நிலநடுக்கத்தை அடுத்து துருக்கியில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கி மட்டுமல்லாது, அண்டை நாடான சிரியாவிலும் சக்திவாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், சிரியாவில் 1400க்கும் மேற்பட்டோரும் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச மீட்புக் குழுவினரும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் துருக்கிக்கு விரைந்துள்ளனர்.
Comments