ஆன்லைன் ரம்மியில் பணமிழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
ஆன்லைன் ரம்மியால் பட்டப்படிப்பையும், பணத்தையும் இழந்த சேலம் மாவட்ட இளைஞர், மதுரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர்ந்த குணசீலனுக்கு, கல்லூரி மூன்றாமாண்டு படிக்கும்போது ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்ததுடன், 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி விளையாடி அந்த பணத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது.
அவரது தம்பி பசுபதி, கடனை அடைக்க 50,000 ரூபாய் வழங்கியதுடன் மதுரையில் தான் பணியாற்றிய உணவகத்திற்கே குணசீலனையும் அழைத்து வந்துள்ளார். கடைசி செமஸ்டர் தேர்வு எழுதாமலேயே உணவகத்தில் ஓராண்டாக வேலை பார்த்துவந்த குணசீலன் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடிவந்துள்ளார்.
அதிலும் பணத்தை இழந்ததால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலிலிருந்த குணசீலன், மதுரையில் தான் தங்கியிருந்த வீட்டில் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Comments