தைப்பூசத் திருவிழா முருகன் கோவில்களில் விழாக்கோலம்

0 5910

தைப்பூச திருநாளை ஒட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பாத யாத்திரையாக சென்றும் விண்ணதிர அரோகரா முழக்கத்துடன் முருகப்பெருமானை வழிபடுகின்றனர்...

தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் திருவிழாக்களில் முதன்மையானது தைப்பூசம். ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் நன்நாளில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

இன்று தைப்பூச திருநாளை ஒட்டி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள், அலகு குத்தியும் காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். முன்னதாக காலையில், முருகப்பெருமானுக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. தைப்பூச விழாவை ஒட்டி, திருச்செந்தூர் கோவில் மற்றும் கடற்கரை பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படுகிறது.

 முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மேள தாளங்கள் முழங்க காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர். தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றே நிறைவு பெற்ற நிலையில், இன்றும் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது.

நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில், ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவில், ஆறாம் படை வீடான பழமுதிர் சோலையில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த விண்ணதிர 'அரோகரா' முழக்கத்துடன் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்தனர்.

இதே போல குன்றத்தூர், கந்தக்கோட்டம், வடபழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும் தைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments