தைப்பூசத் திருவிழா : விழாக்கோலம் பூண்ட முருகன் கோவில்கள்..!
தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர்.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முதன்மையானது தைப்பூசம்... 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவதாக விளங்கும் பூச நட்சத்திரம், தைமாதத்தில் வரும்போது அதனை தைப்பூசமாகக் கொண்டாடுகின்றனர்.
ஆண்டுதோறும் நிறைமதி நாளில் வரும் இந்த நன்நாளில்தான் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு ஆயிரக்கணக்கில் பாதயாத்திரை வருகின்றனர். மயில் காவடி, மச்சக்காவடி, பால்காவடி, பறவைக்காவடி, தீர்த்தக்காவடி ஏந்திய பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
Comments