உடுக்க ஒற்றை சேலை.. பொட்டலம் உணவுக்காக 4 பெண்கள் பலியான சோகம்..! வள்ளல் தொழில் அதிபர் கைது..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு தொழிலதிபர் வழங்குவதாக அறிவித்த இலவச புடவை மற்றும் உணவிற்கான டோக்கனை வாங்க முண்டியத்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளல் தொழில் அதிபர் ஐயப்பன். ஆயில் மில், ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு, ஜல்லி கற்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகின்றது. கடந்த 20 ஆண்டுகளாக தைப்பூசத்தன்று பெண்களுக்கு இலவச புடவையும் உணவும் வழங்குவதை வாடிக்கையாக செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இலவசத்திற்காண டோக்கனை வாரச்சந்தை அருகிலுள்ள தனது எண்ணை மில்லில் வைத்து முன் கூட்டியே வழங்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த மில்லை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்ததால், டோக்கன் வாங்க வந்திருந்தவர்கள் வெளியில் வெயிலில் காத்திருந்தனர். கேட் திறக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புக முயற்சி செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
தள்ளுமுள்ளுவில் சிக்கி பலர் படுகாயமடைந்த நிலையில் 7 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களையும் உயிருக்கு போராடியவர்களையும் போலீசார் வந்து தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ஒற்றை சேலைக்கும் ஒரு பொட்டலம் உணவுக்கும் மணிக்கணக்கில் காத்திருந்து முண்டியடித்து தனது தாயை பறிகொடுத்ததாக பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறினார்.
இதனையடுத்து இலவச சேலைக்கு டோக்கன் வழங்க அனுமதியின்றி ஏற்பாடு செய்ததாக வாணியம்பாடி காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்தனர். நலத்திட்ட உதவி வழங்குவது தொடர்பாக ஏற்கனவே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டதாக ஐயப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தைப்பூசம் அன்று தான் நலத்திட்டம் வழங்க உள்ளதாக ஐயப்பன் தரப்பினர் தெரிவித்ததாகவும், அன்றைக்குத் தான் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வள்ளியம்மாள், ராஜாத்தி, நாகம்மாள், மல்லிகா ஆகிய 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வருங்காலத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் நலத்திட்ட உதவிக்கு மக்களை வரவழைப்பதை போலீசார் முன் கூட்டியே தடுத்து நிறுத்துவது காலத்தின் கட்டாயம்.
Comments