நான் கிருத்திகா பேசறேன்.. கேஸ வாபஸ் வாங்கிரு... வாயடைத்து போன கணவன்..!
தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் தனக்கு உறவுக்கார பையனுடன் திருமணம் நடந்து விட்டதாக கூறி வீடியோ வெளியிட்ட நிலையில், தனது காதல் கணவரை தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறச்சொன்ன ஆடியோ வெளியாகி உள்ளது.
தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட வினித்-கிருத்திகா தம்பதியரை விரட்டிய பெண்வீட்டார் கிருத்திகாவை கடத்திச் சென்றதாக சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது..
குற்றாலம் போலீசார் கிருத்திகாவை மீட்க இயலாமல் தவித்த நிலையில், கிருத்திகா வீடியோ ஒன்றை பதிவிட்டு 'தன்னை யாரும் கடத்த வில்லை எனவும், தான் வேறொரு நபருடன் திருமணம் செய்து கொண்டதாகவும் பதிவிட்டு இருந்தார்.
தனது மனைவியை மிரட்டி பேச வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டிய வினித் கிருத்திகாவை மீட்டு தர கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த சூழலில், அந்த மனு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிருத்திகாவை மீட்க தனிப்படை போலீசார் குஜராத் சென்றிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், கிருத்திகாவின் பெற்றோர்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமின் கொடுப்பதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், வழக்கு விசாரணையை வருகின்ற செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், வினித்தை செல்போனில் தொடர்பு கொண்டு, கிருத்திகா பேசியதாக ஆடியோ ஒன்றை , வினீத்தின் வழக்கறிஞர் வெளியிட்டார். அதில் கிருத்திகா தனது பெற்றோர் மீதான வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்திய நிலையில், காதல் கணவன் வினீத் பேச இயலாமல் தவிப்பது அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது...
தற்போது வரை போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்காத கிருத்திகாவின் பெற்றோர், தங்கள் மகளை எங்கே வைத்துள்ளார்கள் என்பது தெரியாததால் போலீசார் குஜராத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடத்தப்பட்ட கிருத்திகாவை பணய கைதி போல வைத்து வீடியோ, ஆடியோ வெளியிட்டு வரும் அவரது பெற்றோர், போலீஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Comments