காதில் நிற்காமல் வரும் ரத்தம்.. அதிர்ச்சியில் உறைந்த மாணவி.. பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.. பெற்றோர் வேதனையில் கண்ணீர்..!
பிறவியிலேயே ஒரு காது இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காது இணைக்கப்பட்ட நிலையில், காதில் இருந்து ரத்தம் கசிவது தொடர்வதால் அவர் பள்ளிக்கு செல்ல இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரியால் 17 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாப நிலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் - ஈஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு பிறவியிலேருந்தே வலது பக்கம் உள்ள காது இல்லாமல் இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில், மாணவியின் உடலில் இருந்து சதையை எடுத்து வலதுபுற காதை சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறப்படுகிறது. அந்த 17 வயது சிறுமி தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் அவ்வப்போது காதின் மேற்புறத்தில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் காதில் இருந்து ரத்தப்போக்கு அதிகரித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என கூறியுள்ளனர். அதனை நம்பி மாணவிக்கு மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்த பின் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் காதில் ரத்தம் வருவது சரியாகிவிட்டது என சந்தோஷத்தில் பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் விருகம்பாக்கம் அரசு பள்ளியின் வகுப்பு ஆசிரியர்கள் பெற்றோரை வரவழைத்து நீங்கள் உங்கள் மகளை நேரடியாக தேர்வு எழுத அனுப்பி வைத்தால் மட்டும் போதும் எனவும், இதனால் மற்ற மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு அடைவதாக மாணவியை பள்ளிக்கு வர வேண்டாம் என திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் , தங்கள் மகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருகின்ற பொதுத்தேர்வுக்கு தயாராக முறையான பள்ளி படிப்பு தொடங்க உதவி செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்த இஎஸ்ஐ மருத்துவ குழுவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இ.எஸ்.ஐ மருத்துவ மனையின் கண்காணிப்பாளர் மகேஷ் கூறும் போது, அந்த சிறுமிக்கு காது வரவைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம், காதில் அறுவை சிகிச்சை முடிந்து புதிதாக ரத்த நாளங்கள் இணைக்கப்பட்டதால் முதலில் ரத்த கசிவு ஏற்பட்டது . அதனை ஒரு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தோம் தற்போது மீண்டும் ரத்தம் வருவதாக கூறுகிறார்கள். எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து அந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து எதனால் ரத்தம் வருகின்றது என்பதை கண்டுபிடித்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அண்மையில் மகேஷ் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடதக்கது.
பள்ளி ஆசிரியை கூறும் போது, இந்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் திருப்புதல் பயிற்சி மட்டுமே நடப்பதால் சக மாணவர்கள் ரத்ததை கண்டு பயந்ததால் அந்த மாணவியை வீட்டில் இருந்து படிக்க கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
Comments