ரோகிணி திரையரங்க தண்ணீர் தொட்டியில் 7 நாட்களாக கிடந்த சடலம்.. திகிலில் சினிமா ரசிகர்கள்..!
கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது....
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி ஒன்று திரையரங்கின் பார்க்கிங் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் ஒரு நாள் தேவையான தண்ணீரை லாரிகளில் வெளியே இருந்து கொண்டு வந்து நிரப்புவது வாடிக்கையாகும்,
அந்த வகையில் வெள்ளிக்கிழமை அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக தொட்டியின் மூடியை திறந்துள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் இருந்து துர் நாற்றம் வீசியுள்ளது.
உள்ளே பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ந்து போய், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தவர் திரையரங்கில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரிசனாக பணியாற்றி வந்த வெங்கடேசபெருமாள் என்பது தெரியவந்தது.
கடந்த ஜனவரி 26ம் தேதி மதுபோதையில் அவர் பணிக்கு வந்திருந்ததாக தெரிவித்த திரையரங்க நிர்வாகம் , மதுபோதையில் அவர் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்திருக்கலாம் என்றனர்.
மது போதையில் வெங்கடேசபெருமாள் உள்ளே விழுந்த பின்னர் தண்ணீர் தொட்டியின் மூடியை சாமர்த்தியமாக மூடியது யார் ? கடந்த 7 நாட்களாக அவர் தொட்டிக்குள் சடலமாக கிடந்ததாக கூறப்படும் நிலையில் பணிக்கு வந்தவருக்கு என்ன நேர்ந்தது ? என்று கூட திரையரங்கு நிர்வாகம் கண்டு கொள்ளாதது ஏன்? என்ற சந்தேகம் எழுவதால், தியேட்டர் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments