எருது விடும் விழா வேணும்.. அடம் பிடித்து பேருந்துகளை அடித்து நொறுக்கிய பாய்ஸ்..! கண்ணீர் புகை குண்டு வீச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் சாலைமறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், கல்வீசி தாக்கியதில் அரசு பேருந்துகள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் பகுதியில் வியாழக்கிழமை எருதுவிடும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால் மாவட்ட நிர்வாகத்தால் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து காளைகளுடன் விழாவுக்கு வந்தவர்கள் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்
இதையடுத்து எந்த ஒரு விதிமுறையுமின்றி எருது விடும் விழா நடத்த 2 மணி நேரத்துக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். அவர்களோ கூடுதல் நேரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் 3 மணி நேரமாக சாலை மறியல் செய்ததால் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றது
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மற்றும் அரசு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்
கலைந்து செல்ல மறுத்தவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
இந்த களேபாரங்களை தொடர்ந்து எருதுவிடும் விழாவை மாவட்ட ஆட்சியர் முற்றிலுமாக ரத்து செய்து உத்தரவிட்டதால், விழாவில் பங்கேற்க வந்த காளைகள் வண்டிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.
Comments