நள்ளிரவு 2 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு குத்துச்சண்டை போட்டி..! இது நியாயமாரே.. வீராங்கனை ஆதங்கம்..!
சிவகங்கையில் மாநில அளவிலான மாணவ மாணவியர்களின் குத்துச்சண்டை போட்டியை நள்ளிரவு 2 மணிக்கு நடத்தியதால் முழு திறனுடன் விளையாட இயலவில்லை என்றும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி போட்டியிட வைத்ததாகவும் வீராங்கனை புகார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் மாநில அளவிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளின் குத்துச்சண்டை போட்டி கடந்த 3 தினங்களாக நடைபெற்றது .
மாவட்ட அளவில் தகுதிபெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான இறுதிச்சுற்று போட்டிக்கு சென்றிருந்தனர். மீஞ்சூரை அடுத்த திருவல்லைவாயில் கிராமத்தைச் சேர்ந்த காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி குண ஸ்ரீ என்பவரும் சனிக்கிழமை சிவகங்கை சென்றார். முதல் நாள் இரண்டு குத்துச்சண்டைகள் கொடுக்கப்பட்டன, அதில் வெற்றி பெற்ற அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
திங்கட்கிழமை இரவு வெகு நேரம் ஆகியும் இறுதிச்சுற்று நடைபெறாததால் குண ஸ்ரீ உறங்கச்சென்றுள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அவரை எழுப்பி குத்துச்சண்டை இறுதிச்சுற்று இப்பொழுது நடக்கவிருக்கிறது தயாராக இருக்குமாறு கூறியுள்ளனர். நள்ளிரவு 2 மணிக்கு இறுதிசுற்றுக்காக சென்னையைச் சேர்ந்த மாணவியுடன், குணஸ்ரீ களமிறங்கினார்
சரியான ஓய்வும், சரியான பயிற்சியும் இல்லாத நேரத்தில் இறுதிச்சுற்றில் இரண்டு பெண் பிள்ளைகளை, ஆசிரியர்கள் குத்துச்சண்டை செய்ய வைத்தது தவறு என்று குற்றஞ்சாட்டிய குத்துச்சண்டை ஆர்வலர்கள், ஒரு குத்துச்சண்டை போட்டிக்கும் அடுத்த குத்து சண்டை போட்டிக்கும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் இடைவெளி தேவை அப்பொழுதுதான் அந்த நபர் சண்டையிடுவதற்கு சரியான உடல் தகுதியும் மன வலிமையும் கிடைக்கும் என்ற நிலையில் மூன்று தினங்களில் மாநில அளவிலான மாணவ மாணவிகளுக்கு இடையே குத்துச்சண்டை போட்டியை நடத்தி முடிப்பதற்கு இத்தனை அவசரம் எதற்கு..? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
குணஸ்ரீ இதற்கு முன்னால் 19 முறை தங்க பதக்கமும் ஒரு முறை தேசிய அளவில் சப் ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்ற சிறந்த வீராங்கனை என்ற நிலையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு நடந்த போட்டியால் தன்னால் சரியான முறையில் சண்டை செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
போட்டிகளை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாகவும் , இரவு நடக்க இருந்த இறுதி போட்டி, நேரமின்மையால் தாமதமாக நள்ளிரவில் நடத்தப்பட்டதாக இந்த போட்டியை நடத்திவர்கள் விளக்கம் அளித்தனர்.
Comments