பி.ஐ.எஸ் 916 ஹால் மார்க் முத்திரையுடன் போலி நகைகள் உரசினாலும் கண்டுபிடிக்க முடியாதாம்..! வியாபாரிகள் போலீசில் பரபரப்பு புகார்
B.I.S.916 ஹால்மார்க் முத்திரையுடன் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டியதன் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தரமான நகை என்பதற்கு அடையாளமாக உள்ள பி.ஐ.எஸ். 916 ஹால் மார்க் முத்திரையுடன் தூத்துக்குடியில் போலியான தங்க நகைகள் ஏராளமாக புழக்கத்தில் இருப்பதாக அடகுக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்
தூத்துக்குடியில் 50க்கும் மேற்பட்ட நகை அடகுக்கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய போலி நகைகளை செய்த ஒரு கும்பல், அதனை தூத்துக்குடி சோரீஸ் புரம், ஸ்டேட் பேங்க் காலனி, கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நகை அடகு கடைகளில் அடகு வைத்து மோசடியை அரங்கேற்றி உள்ளது.
இந்த மோசடி கும்பல் அடகு வைத்த நகைகளை அடகு கடை உரிமையாளர்கள் சோதனை செய்ததில் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த நகைகள் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
உரசிப் பார்த்தாலோ, நகைகளை கண்டறியும் இயந்திரத்தில் சோதித்தாலோ கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த நகைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், அரசாங்கத்தின் 916 BIS ஹால் மார்க் முத்திரையை வைத்து தங்க வளையல்கள், முருக்குச் செயின், பிரேஸ்லெட் என தங்கம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
நகைகளை வெட்டி பார்த்தால் மட்டுமே தரம் தெரியும் என்றும் 24 கிராம் எடையுள்ள நகையில் ஒரு கிராம் அளவுக்கு கூட தங்கம் இல்லாத நகைகளை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக அடகுக்கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
காவல் நிலையங்களில் தாங்கள் புகார் அளித்தது தெரிந்ததும் மோசடி கும்பலில் உள்ள ரவுடிகள் மிரட்டுவதாகவும் எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
பாதிக்கப்பட்ட தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடி கும்பல், போலி தங்க நகைகளை, அடகு கடையில் மட்டும் வைத்து பணத்தைப் பெற்றுள்ளதா ? அல்லது கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத்துறை வங்கிகளிலும் நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளதா ? கடைகளில் இது போன்ற போலி நகைகள் விற்க படுகின்றதா ? என்பது குறித்தும் காவல்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments