2047 ஆம் ஆண்டிற்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்-குடியரசுத் தலைவர்
2047 ஆம் ஆண்டிற்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்றும், இளைஞர்களும், பெண்களும் அதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உலகளவில் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்த திரௌபதி முர்மு, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பெருமிதம் கொண்டார்.
அனைத்து தரப்பினருக்கும் சீரான வளர்ச்சியை தருவதே மத்திய அரசின் இலக்கு என தெரிவித்த திரௌபதி முர்மு, சிறு குறு விவசாயிகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியும், நாட்டு மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் 27 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியும் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.
3 கோடி ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்ககப்பட்டுள்ளதாகவும் முர்மு தெரிவித்தார்.
நாட்டில், அடிமைத்தன அடையாளங்களை மத்திய அரசு அகற்றிவருவதுடன், ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்துவருவதாகவும் முர்மு தெரிவித்தார்.
Comments