சொத்துக்காக சகோதரரை கடத்தித் தொங்கவிட்ட மாஃபியா சிஸ்டர் கேங்..! மனநல காப்பகத்தில் அடைத்தனர்

0 2862

பல்லடம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக சகோதரரை கடத்தி வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்கு கடத்திச்சென்று மனநலக் காப்பகத்தில் சேர்த்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சிவக்குமார் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் உள்ளனர். அம்பிகாவுக்கு திருமணமாகி பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொன்னுசாமி இறந்து விட்டதால் அவரது சொத்துக்கள் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டன. பெருமாநல்லூரிலும், கோயமுத்தூர் சுல்தான்பேட்டையிலும் 3 ½ ஏக்கர் நிலமும், ஒரு வீடும் உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவக்குமாரிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இந்நிலையில் தந்தையின் சொத்துக்களை தங்களுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி அம்பிகா குடும்பத்தினர் அடிக்கடி சிவக்குமாரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேடபாளையத்தில் உள்ள தனது நண்பர் வடிவேலை சந்தித்துவிட்டு சிவக்குமார் வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த அம்பிகா, அவரது கணவர் வேலுச்சாமி, மூத்தமகன் கோகுல் மற்றும் சிலர் சேர்ந்து சிவக்குமாரை கை கால்களை கட்டி வாயை மூடி மாருதி எக்கோ வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.

அறிவொளிநகரில் அம்பிகா வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ள வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கயிற்றைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு கையாலும், கட்டையாலும் அடித்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. அடிதாங்க முடியாமல் சிவக்குமார் 'என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்' என்று கதறியுள்ளார்.

தொடர்ந்து சிவக்குமாரை கீழே இறக்கிய அம்பிகா அண்ட் கோ 21 ஸ்டாம்ப் பேப்பரில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, 5 சவரன் கைச்சங்கிலி, கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலி, பையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தெக்கலூரில் உள்ள வீடு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பறித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, சிவக்குமாரை ஏற்றிக்கொண்டு இரண்டு கார்களில் பெங்களூர் சென்றுள்ளனர்.செல்லும் வழியில் சிவக்குமாரை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து மயங்கச் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து பார்த்தபோது பெங்களூரில் உள்ள ஒரு மனநலக் காப்பகத்தில் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது.

அங்கிருந்தவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துக் கூறி, வளர்ப்பு தாய் வசந்தி மற்றும் சோமனூர் சங்கீதா தியேட்டரின் உரிமையாளரான ராமமூர்த்தி ஆகியோருக்கு தகவல் அளித்ததின் பேரில் பெங்களூர் சென்று அவர்கள் சிவக்குமாரை மீட்டு அழைத்து வந்தனர்.

சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் அம்பிகாவின் கணவர் வேலுச்சாமி மற்றும் கோகுலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அம்பிகா உள்ளிட்ட கூலிப்படைக் கும்பலை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments