அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..கே.ஜி.எப் ஓனருக்கு காப்பு.. துணிவு படத்தில் நடித்தவர்..!
சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் வியாபார போட்டியில் ரவுடியை ஏவி தாக்குதல் நடத்திய புகாரில் துணிவு படத்தில் நடித்த கே.ஜி.எப் துணிக்கடை உரிமையாளர் விக்கியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்சி ரோட்டில் NN கார்டன் 3வது தெருவில் விக்கி என்கிற விக்னேஷ் என்பவர் கேஜிஎஃப் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார் . இவர் அண்மையில் வெளியான துணிவு படத்தில் வட மாநில ஊழியரை தாக்கும் காட்சியில் நடித்துள்ளார்.
யூடியூப் சார்ட்ஸ் மூலம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் ஆஃபர் என்று கூறி ஆடைகளை மலிவு விலையில் விற்பதாக விளம்பரப்படுத்தி சமூக ஊடகங்களில் பிரபலமானதால், 3 கடைகள் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பொங்கலுக்கு முன்பு விக்கி தனது தலையில் ஆண்கள் உள்ளாடையை மாட்டிக் கொண்டு., சொல்லுங்க ஜி.. என்ற கடை உரிமையாளர் ராஜேஷை யூடியூபில் கிண்டல் செய்து வீடியோ பதிவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கேஜிஎஃப் கடையை சேர்ந்த நித்தின் என்பவரை ரவுடி வெள்ளை நாகராஜ் குழுவினர் தாக்கி உள்ளனர்.
ஆத்திரமடைந்த நித்தின் பத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினருடன், சொல்லுங்க ஜி கடைக்கு சென்று மீண்டும் வம்பிழுத்ததால், ரவுடி வெள்ளை நாகராஜ் கோஷ்டி, விக்கியின் உறவினர் கடையான டெரன்டிங் பாஸ் கடைக்கும் சென்று பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 3 கடைகளின் உரிமையாளர்களும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர்.
வியாபாரிகள் மோதலில் ரவுடிகள், கூலிப்படையினர் தலையிட்டது தொடர்பாக, வண்ணாரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில்., கே.ஜி.எப் விக்கி மற்றும் சொல்லுங்க ஜீ கடை உரிமையாளர் ராஜேஷ் ஆகியோர் பல குற்ற சம்பவங்களில் தொடர்புடைய, வெள்ளை நாகராஜன் என்ற ரவுடியை தங்களது கடைகளுக்கு பாதுகாப்புக்கு என்று பலமுறை சம்பளம் கொடுத்து கூலிப்படை போல பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
சம்பவத்தன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கே.ஜி.எப் விக்கி, ரவுடி வெள்ளை நாகராஜ், யுவசக்தி, அஜித் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி சகவாசம் சிறைவாசம் என்பதை விளம்பர வியாபாரி விக்கிக்கு விரைவாக உணர்த்தி உள்ளது இந்த சம்பவம்.
Comments