ரூ.10 லட்சம் பணத்துக்காக வங்கி பெண் ஊழியரை காதலித்து கடத்திக் கொலை..! நாடக காதல் விபரீதம்

0 3836

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு கடத்தல் நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்தனர்.  நம்பி வந்த காதலியை 10 லட்சம் ரூபாய் பணத்துக்காக பலிகொடுத்த சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஓசூர் அருகே நெரிகம் கிராமத்தை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் பிரியங்கா. 22 வயது மாற்றுத்திறனாளியான இவர் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். பிரியங்காவை , முதுகுறுக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பெண்ணின் தந்தை வெங்கடசாமியின் செல்போனை தொடர்பு கொண்ட ஸ்ரீதர், மகளைக் கடத்தி வைத்திருப்பதாகவும், தனக்கு 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். வெங்கடசாமி இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

ஸ்ரீதரின் செல்போன் சிக்னலை கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், கர்நாடக மாநிலம் கோலார் காட்டுப்பகுதியில் ஸ்ரீதர் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். ஸ்ரீதரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

பிரியங்கா வங்கியில் பணிபுரிவதால் நினைத்த நேரமெல்லாம் பணம் வாங்கிக் கொள்ளலாம் என்பதற்காகவே ஸ்ரீதர் காதலித்துள்ளான். ஆனால் பிரியங்கா ஸ்ரீதரை முழுமையாக நம்பி உள்ளார்.

வெள்ளிக்கிழமை பிரியங்காவை அழைத்துச்சென்று ராமன் தொட்டி வனப்பகுதியில் உள்ள பாறையின் மீது ஏறி அமர்ந்து ஸ்ரீதர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா பணியாற்றி வரும் வங்கியில் இருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தருமாறு ஸ்ரீதர் கேட்டதாகவும், கடன் விவகாரமெல்லாம் வேற டிப்பார்ட் மெண்ட் என்று பிரியங்கா மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் ஸ்ரீதர், பிரியங்காவை பாறையின் மீது இருந்து கீழே தள்ளி விட்டதில் பிரியங்கா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், உயிரிழந்த பிரியங்காவின் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்று அருகில் இருந்த நீரோடையில் வீசி விட்டு, பிரியங்காவின் தந்தையை பிரியங்காவின் செல்போனில் இருந்து தொடர்பு கொண்டுள்ளான்.

அவரிடம் உங்கள் பெண்ணை கடத்தி உள்ளேன் எனக் கூறி தனக்கு 10 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டு மிரட்டல் விடுத்து கடத்தல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து நீரோடையில் இருந்து பிரியங்காவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணின் சாதியை குறிப்பிட்டு மாற்றுத்திறனாளி என்பதால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் பேரிகை காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

காதலன் ஸ்ரீதரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

காதலனை நம்பி ஆள் அரவமற்ற இடத்திற்கு சென்றதால் அந்தப்பெண் கொலை செய்யப்பட்டது கூட யாருக்கும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments