Zomato ஊழியரை சாலையில் போட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம்..! வேகத்தால் உண்டான பிரச்சனை
சாலையில் தங்களை முந்திச்சென்ற சொமோட்டோ டெலிவரி ஊழியரை, இருவர் சேர்ந்து சரமாரியாக தாக்கி சாலையோரம் தூக்கி வீசியதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே சாலையோரம் zomotto டெலிவரி ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்
விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் ஒடுகத்தார்பகுதியை சேர்ந்த திருமலைவாசன் என்பதும் 22 வயது இளைஞரான அவர் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு , வேலூர் மாநகராட்சி பகுதியில் zomotto டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
முதலில் அவர் விபத்தில் காயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அவரை இருவர் சாலையில் வைத்து ஹெல்மெட்டாலும், கையாலும் சரமாரியாக தாக்கி சாலையோரம் தூக்கிபோட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வீடியோவை வைத்து தாக்குதல் நடத்திய இருவரை அடையாளம் கண்டனர்.
திருமலை வாசனை தாக்கியது குங்பூ மாஸ்டர் பார்த்திபன், கூட்டாளி தணிகாசலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பார்த்திபனை பிடித்து விசாரித்தனர்.
தங்கள் வாகனத்தை முந்திக் கொண்டு வேகமாக சென்றதால், zomotto ஊழியர் திருமலை வாசனின் பைக்கை விரட்டிச்சென்று பிடித்து , அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டால் அவரை அடித்து உதைத்ததாகவும், அவர் மூர்ச்சையானதால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கருதி சாலையோரம் போட்டு விட்டு தப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
கொலை முயற்சி வழக்கில் பார்த்திபனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தணிகாசலத்தை தேடி வருகின்றனர். தனது தம்பி தாக்கப்பட்டதை, அந்த வாகன ஓட்டி மட்டும் செல்போனில் வீடியோ எடுக்கவில்லை என்றால் விபத்தில் சிக்கியதாகவே கருதி இருபோம் என்கிறார் திருமலைவாசனின் சகோதரர்
Comments