தலைக்கவசம் இல்லைன்னா இனி இப்படியும் செய்வோம்.. போலீஸ் சொன்ன பாடம்..! மிரண்டு போன இளைஞர்கள்

0 2548

கோவையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர்களுக்கு 3 மணி நேரம் போக்குவரத்து விதிகள் குறித்து வகுப்பெடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. 

கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிசெல்வோருக்கு அபராதத்துடன், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

கோவையில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மறித்து அவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த மாணவர்களிடம் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாக விசாரித்து, தலைக்கவசத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.

போக்குவரத்து விதியை மீறி அபராதம் கட்டிவிட்டு புறப்பட முயன்றவர்களில், அவசர மருத்துவ தேவைகளுக்கு செல்பவர்கள் தவிர்த்து, மற்றவர்களை குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர்களுக்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அறிவுரைகளை கூறி வகுப்பெடுத்தனர்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம், வளைவுகளில் திரும்புவதற்கு முன்பாக இண்டிகேட்டர் விளக்கு எரிய விடுவது, எந்த சாலையில் எவ்வளவு வேகத்தில் செல்வது, அதிவேகத்தில் சென்றால் என்ன மாதிரியான விபத்துகள் நேரிடும் என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு செயல் முறை விளக்கங்களை 3 மணி நேரம் தெளிய தெளிய அறிவுரைகளாக வழங்கினர்.

குழந்தைகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் பல இளைஞர்கள் வெட்கப்பட்டு முகத்தை திருப்பிக் கொண்டனர். சாலை விதியை மீறியவர்களை நாள் முழுவதும் இந்த பூங்காவில் அமர வைக்க திட்டமிடப்பட்ட நிலையில், பின்னர் போலீசார் கால அளவை 3 மணி நேரமாக குறைத்துக்கொண்டது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments