பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்... எட்டுத் திக்கும் எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்.!

0 6405

பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா முழக்கங்களுடன் முருகப்பெருமானை தரிசித்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, கடந்த 23ம் தேதி முதல் 90 யாகசாலைகள் அமைக்கப்பட்டு எட்டுக் கால பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

கங்கை, காவிரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் இன்று காலை, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் தமிழில் ஒலிக்க ராஜகோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷெகம் நடத்தப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர்கள் மூலமாக கோபுரங்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.

பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்ட நிலையில், கோவிலில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” கோஷத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆயிரக் கணக்கில் பக்தர்கள் குவிந்ததால், பழனி மலையடிவாரத்தில் பெரிய எல்.இ.டி திரை மூலம் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, ஹெலிகேம் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments