காலிங் பெல் வேலை செய்யல.. செல்போனையும் எடுக்கல.. வீட்டின் பின்புறம் இளைஞர் சடலம்.. பைப் வழியாக ஏற முயன்று விழுந்தாரா ?

0 2372

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாததால், பலமுறை செல்போனில் அழைத்தும் மனைவி போனை எடுக்காததால் , மூன்றாவது மாடிக்கு பைப்லைன் வழியாக ஏறிச்சென்ற வாலிபர்  கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் , அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பா கவுண்டர் தெரு, வி.ஐ.பி நகர் பகுதியை சேர்ந்த மார்க்கெட்டிங் ஊழியர் தென்னரசு . இவருக்கு புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய தென்னரசு வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாத நிலையில் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அயர்ந்து தூங்கியதால் மனைவி போன் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மூன்றாவது மாடிக்கு செல்வதற்காக வீட்டின் பின்புறம் சென்றதாகவும் பைப்லைன் வழியாக மாடிக்கு ஏறியபோது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அதிகாலை விழித்த தென்னரசுவின் மனைவியோ, கணவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்று தனது அண்ணனுக்கு போன் செய்துள்ளார். அவர் வந்து பார்த்த போது வீட்டிற்கு வெளியே தென்னரசுவின் இரு சக்கர வாகனம் நின்றுள்ளது. உடனடியாக தென்னரசுக்கு போன் செய்தபோது வீட்டின் பின்புறத்தில் இருந்து செல்போன் ரிங் சத்தம் கேட்டதால், அங்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தென்னரசு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பின்னர் அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து தென்னரசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தென்னரசுவின் உயிரிழப்பில் சந்தேகமம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

இந்த சம்பவத்தில் தென்னரசுவின் நண்பர்களான இளையராஜா, கோவிந்தராஜ் மற்றும் வினோத் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களை பிடித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதற்கிடையே காவல் நிலையம் வந்த அவரது நண்பர்களை மடக்கிய தென்னரசுவின் உறவினர்கள் அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments