என்னடாப்பா வயசாகுது.. கல்லூரி மாணவனை கொன்று புதைத்த கொடுரம்..! 13 - 16 வயது கஞ்சா குடிக்கிகள் கைது!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காதல் போட்டியால் கல்லூரி மாணவரை கொலை செய்து தேரிகாட்டில் புதைத்த கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகன தீவைப்பு வழக்கு விசாரணைக்குச் சென்ற சிறுவர்கள் கொலை சம்பவத்தை ஒப்புக் கொண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே செல்வ மருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற 23 வயது கல்லூரி மாணவன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாயமானார்.
திசையன்விளை போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர் எந்த துப்பும் துலங்கவில்லை. இந்தநிலையில் இரு சக்கர வாகனம் ஒன்றிற்கு தீவைத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 15 வயது சிறுவன் , தான் கொலை செய்யவில்லை என்று உளறியதால், மாயமான ராஜேந்திரன் வழக்கின் மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.
ராஜேந்திரன் அதே ஊரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார், அந்த மாணவியை கஞ்சா குடிக்கி சிறுவனும் காதலித்து வந்துள்ளான். காதலுக்கு போட்டியாக உள்ள ராஜேந்திரனை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய இந்த விபரீத சிறுவர்களும் சேர்ந்து ராஜேந்திரனை 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேரிக்காட்டு பகுதிக்கு கூட்டிச்சென்றுள்ளனர்.
தேரி காட்டில் திருட்டுத்தனமாக மரம் ஏறி இளநீர் மற்றும் பனை மரத்தின் நுங்கு வெட்டி சாப்பிடுவது இவர்கள் வழக்கம் என்பதால் அந்த இடத்திற்கு நுங்கு வெட்டி சாப்பிடலாம் என்று கூறி ராஜேந்திரனை அழைத்துச்சென்று இந்த கொடூர கொலையை செய்தது தெரியவந்துள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த தேரிக்காட்டிற்குள் ராஜேந்திரனை புதைத்ததாக வாக்கு மூலம் அளித்ததோடு, புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினர். புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராஜேந்திரனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சடலம் ராஜேந்திரன் உடையது தானா ? என்பதை கண்டறிய எலும்புகளை ரசாயண பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் சிறுவர்கள் என்பதால் அவர்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக கண்ணாடி முழுவதும் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் 3 பேரையும் அழைத்து வந்தனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் பெற்றோர், கொலையாளிகளுக்கு ஏசி காரா ? எனக்கேட்டு அவர்களை திட்டித்தீர்த்தனர்.
உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் , அந்த சிறுவர்களைத் தாக்கிவிடக்கூடாது என்பதால் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொலையை நிகழ்த்தியது எப்படி என்று நடித்துக் காட்டிய பின்னர், அதே காரில் 3 பேரையும் பத்திரமாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். கொலை செய்த மூன்று பேருமே சிறுவயதிலே கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு குவாட்டர் மதுவுக்கு 150 ரூபாய் தேவைப்படும் நிலையில், பொட்டலம் 30 ரூபாய்க்கு கிடைப்பதால் கஞ்சா போதைக்கு தாங்கள் கஞ்சாவுக்கு அடிமையானதாக , சிறுவர்கள் போலீசாரிடம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments