அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்... முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்ற அண்ணன்-தம்பி!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை அண்ணன்-தம்பி வென்று வாகை சூடினர்.
அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவும், விசில்கள் பறக்க, ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே 825 காளைகளும், 303 காளையர்களும் களமிறங்கி களத்தை விறுவிறுப்பாக்கினர்.
களத்தில் தீரம் காட்டி விளையாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் தங்க நாணயங்களை வென்ற நிலையில், விளாங்குடி கல்லூரி மாணவி ஆஷிகா களமிறக்கிய காளை "கருப்பும்" கவனத்தை ஈர்த்தது.
ஜல்லிக்கட்டில் வீரம் மட்டுமல்ல, அன்பும் உண்டும் என்பதை உலகிற்கே இப்போட்டி எடுத்துக்காட்டியது. மீண்டும் வாடிவாசலுக்கு திரும்பி வந்த காளை முட்டியதில், சிக்கிக் கொண்ட வீரரை, சக வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்டனர்.
முதலிடத்திற்கான போட்டியில் இருந்த சகோதர்களில் ஒருவரை ஒரு காளை தாக்க முயன்ற போது அந்த காளையின் கவனத்தை திசை திருப்பி சகோதரனை காப்பாற்றிய பாசத்தையும் ஜல்லிக்கட்டு பறைசாற்றியது.
அதே நேரத்தில், தனது காளையை அடக்கியவரை துண்டால் அடித்த மாட்டின் உரிமையாளருக்கு சக வீரர்கள் தர்ம அடி கொடுக்கவும் தவறவில்லை. களத்தின் உள்ளேயும், வெளியேயும் உற்சாக மிகுதியில் நிகழ்ந்த சில சம்பவங்களை தீர்க்க போலீஸ் தலையீடும் தேவைப்பட்டது.
பிடித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டு களமிறக்கப்பட்ட பொன்னமராவதி காளை, கெத்துக் காட்டி விட்டு சென்ற நிலையில், கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனின் காளை களத்தில் ஒரு கை பார்த்து விட்டு உரிமையாளருக்கு நிசான் காரையும், கன்றுடன் கூடிய பசுவையும் முதல் பரிசாக பெற்றுத் தந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 26 காளைகளை அடக்கி சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட நிசான் காரை வென்றார்.
அவரது சகோதரர் உறவு கொண்ட ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த அஜய் 20 காளைகளையும், அலங்காநல்லூர் ரஞ்சித் 12 காளைகளை அடக்கி மோட்டார் சைக்கிளை வென்றனர். சிறந்த காளைக்கான தேர்வில், புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் காளை, மதுரை வெள்ளம்பழம்பட்டி பட்டாணி ராஜாவின் காளைகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
Comments