கடந்த 2 ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த பட்டாக்கத்தி கும்பல் கைது
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம் பட்டியில் கடந்த 2 வருடங்களாக பட்டாக்கத்தியுடன் சென்று பல இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 23 வய்துக்கு உட்பட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
இதில் ஒரு காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் சங்கோதி பாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம் மற்றும் கோவில் பாளையம் காவல் நிலையப் பகுதிகளில் பட்டாக்கத்தி கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை கருமத்தம்பட்டி பகுதியில் பட்டாக்கத்திகளுடன் கொள்ளையடித்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினர் கொள்ளை கும்பலின் நடமாட்டங்கள் குறித்து செல்பேசி அலைவரிசையை கண்காணித்து அவர்களது நடமாட்டம் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.
அப்போது அவர்கள் மீண்டும் கருமத்தம்பட்டி பகுதியில் புதன்கிழமை இரவு கொள்ளை அடிக்க வருவது தெரியவந்தது. உடனடியாக உஷாரான தனிப்படையினர் கொள்ளையர்களைப் பிடிக்க வலை விரித்தனர். இதில் இலங்கை அகதி முகாமில் தங்கி இருக்கும் சூர்யா என்பவரை முதலில் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பெயரில் ஒரு டீக்கடையில் கூட்டாளிகள் ஆயுதங்களுடன் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக ஆய்வாளர் ராஜதுரை தலைமையில் போலீசார் அந்த கடையை சுற்றி வளைத்த போது கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அப்போது ஆய்வாளர் ராஜதுரை காவலர் லோகநாதன் ஆகியோர் அரை கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் துரத்திச் சென்று பட்டாக்கத்தி கும்பலின் தலைவன் மற்றும் அவனுடன் இருந்த 16 வயது சிறுவன் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.இவர்களி டமிருந்து 15 செல்போன்கள் மூன்று பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Comments