சாப்பாடு போட்டே கணவனை கொன்ற அதர்ம பத்தினி..! அதிர்ந்து போன போலீஸ்

0 5804

சாப்பாடு போடாமல் பட்டினிபோட்டு கொலை செய்தவர்கள் பற்றி கேள்வி பட்டிருப்போம், ஆனால் பெண் ஒருவர் விதவிதமாக சமைத்து போட்டு, கணவனை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பைடி ராஜு. இவரது மனைவி ஜோதி ராஜு. திருமணமாகி 6 வருடங்கள் கடந்த நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்த கணவர் பைடி ராஜூ மாயமானதாக காவல்துறையில் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மனைவியின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது, அவர் நூக ராஜூ என்பருடன் அதிக நேரம் செல்போனில் பேசி இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது கணவரை சாப்பாடு போட்டு கொன்ற கொடூர சம்பவம் அம்பலமானது.

பைடி ராஜூவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே, ஜோதிக்கு, நூக ராஜூவுடன் காதல் இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்னரும் அதனை தொடர்ந்துள்ளனர். தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தும் அளவுக்கு இந்த விபரீத காதல் நீண்டுள்ளது.

தனக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர் வேலைக்கிடைத்துள்ளதாக கூறிய ஜோதி, தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்று ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ள வாடகை வீட்டில் காதலனுடன் பொழுதை கழித்து விட்டு மாலையில் வீடு திரும்புவதை வாடிக்கையாக்கி உள்ளார்.

இந்த திருட்டு காதல் விவகாரம் அண்மையில் கணவனுக்கு தெரியவந்துள்ளது. கணவனிடம் வாடகை வீட்டில் கையும் களவுமாக சிக்கியதும் குழந்தைகளுக்காக திருந்தி வாழ்வது போல நடித்த ஜோதி, சம்பவத்தன்று தனது கணவருக்கு வீட்டில் விதவிதமாக சமைத்துப்போட்டு விருந்து வைத்துள்ளார். போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கணவனை வயிறு புடைக்க சாப்பிடவைத்துள்ளார். அனைத்து உணவிலும் தூக்க மாத்திரை கலக்கப்பட்டிருந்ததால் பைடி ராஜூ சிறிது நேரத்திலேயே மயங்கியதாக கூறப்படுகின்றது.

உடனடியாக தனது காதலனை செல்போன் மூலம் அழைத்து, கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மயக்கத்தில் இருந்த கணவன் செத்து விட்டாரா ? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து தனது கணவர் அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பைடி ராஜூவை பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிச் சென்றுஉள்ளனர். இதையடுத்து இரு சக்கரவாகனத்தில் கணவரின் சடலத்தை அமரவைத்த ஜோதி, காதலன் முன்னால் அமர்ந்து வாகனத்தை இயக்க, இவர் பின்னால் அமர்ந்து சடலத்தை தாங்கிப்பிடித்தபடி மயானத்துக்கு கொண்டு சென்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

சடலம் அடையாளம் தெரியாமல் கரிக்கட்டையானதும் வீட்டிற்கு திரும்பி, உறவினர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக கணவர் மாயமானதாக போலீசில் புகார் அளித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments