சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் காரசார விவாதம்..!
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் மீது, சட்டமன்ற உறுப்பினர்களின் காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, தீர்மானத்தை ஒருமனதாக வரவேற்பதாக தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, ராமர் குறித்து கருத்து தெரிவித்தார்.
கடந்த காலத்தில், சேது சமுத்திர திட்டம் பற்றி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு தெரிவித்தபோது, குறுக்கீடு செய்து சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய சட்டமன்ற பாஜகக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், ராமர் காலத்தில் இருந்த பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், பாஜக ஆதரிக்கும் என்றார்.
இதனிடையே, ராமர் குறித்து செல்வபெருந்தகை தெரிவித்த கருத்துக்கு, அதிமுக, பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, செல்வப்பெருந்தகையின் கருத்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தொடர்ந்து, தனித்தீர்மானம் மீது அதிமுக சார்பில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், இத்திட்டம் மக்களுக்கு அதிக சாதகங்களை தந்தால், தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு குறைந்திருக்கும் என்றும், திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து, ஆதரவளித்தனர்.
இதனையடுத்து, முதலமைச்சர் கொண்டு வந்த சேது சமுத்திர திட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
Comments