உயிரை விட வேண்டாம்.. ஆன்லைன் சூதாட்டம் ஆப்பில் தப்பிப்பது எப்படி ?
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடுமை தமிழகத்தில் தொடரும் நிலையில் அதில் இருந்து தப்பிக்க வழி சொல்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ். 34 வயது பட்டதாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்கினார்.
அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். பெரிய தொகை கிடைக்கும் என்ற ஆசையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடியதாகவும், அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி வெறி கொண்டு விளையாடியதாகவும் கூறப்படுகிறது. அதிலும் சிவன்ராஜ் தான் விளையாடிய அனைத்து விளையாட்டிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார்.
இதனால் சம்பவத்தில் மணமுடைந்த சிவன்ராஜ் தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதனை கூல்ட்ரிங்ஸில் கலந்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த சிவன்ராஜ் உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா ஒரு தங்கை இவர் தான் குடும்பத்தில் உள்ள ஆண்மகன் ஆவார். அவரை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து சைபர் குற்றபிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது, முதலில் கூடுமானவரை இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் இயக்கப்படும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஆரம்பத்தில் சிறு தொகைகளை பந்தயமாக வைத்து விளையாடும் நபர்களை எளிதாக வெற்றி பெறவைத்து, மீனுக்கு போடப்படும் தூண்டிலில் உள்ள புழு போல அவர்களது ஆசையை தூண்டி விடுவார்கள்.
பெருந்தொகையை பந்தயமாக கட்டும் போது ஆட்டோமெடிக்காக அது அவர்களை எளிதாக தோற்கடித்து பணத்தை சுருட்டிக் கொள்ளும். விட்டதை பிடிக்க எண்ணி மீண்டும் பணம் போட்டால், மொத்தமும் கெட்டுவிடும். பின்னர் கடன் வாங்கிப் போட்டால், கடனை திருப்பிச்செலுத்த அசலும் , முதலும் ஒரு போதும் திரும்ப வராது , இழப்பே வரும்.
எனவே அதிக பட்சமாக சிறு தொகைகள் விளையாடி வெற்றி கிடைத்தவுடன், புத்திசாலித்தனமாக அந்த செயலியை செல்போனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்து விட்டால் மீண்டும் ரம்மி ஆடும் எண்ணம் வராது என்று சுட்டிக் காட்டும் சைபர் குற்ற நிபுணர்கள், இது திறமையான விளையாட்டு அல்ல, உங்களிடம் என்னென்ன கார்டுகள் உள்ளன என்பதை தெரிந்து கொண்டு விளையாட வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேரின் மோசடி வித்தை என்கின்றனர்.
Comments