எங்களுக்கு இருந்த ஒரே ஆதரவும் போயிருச்சிப்பா..! அஜீத் ரசிகரின் உறவினர்கள் வேதனை

0 4959

சென்னை கோயம்பேட்டில் துணிவு படம் பார்க்கச்சென்று லாரியில் ஏறி ஆட்டம் போடும் போது தவறி விழுந்து, உயிரிழந்த அஜீத் ரசிகரின் உறவினர்கள் தங்களுக்கு இருந்த ஒரே ஆதரவும் பிரிந்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் துணிவு படம் நள்ளிரவு ஒரு மணிக்கும் வாரிசுத் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் அங்கு அதிகளவில் திரண்டனர்.

சில ரசிகர்கள் அந்த வழியாக வந்த லாரி மற்றும் கண்டெய்னர் லாரி மற்றும் ட்ரெய்லர் லாரி மீது ஏறி ஆட்டம் போட்டனர். அப்போது இந்த கொண்டாட்டங்களை பார்த்துகொண்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் என்பவர் தனது நண்பர்களோடு ட்ரெய்லர் லாரி ஒன்றின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார்

கூட்டத்தை கடந்து லாரி சென்றபோது அவர்கள் கீழே குதித்த போது, அதில் 19 வயது இளைஞர் நிலைத்தடுமாறி விழுந்தார். இதில் சாலையில் விழுந்த பரத்குமாருக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. எழுந்திருக்க முடியாமல் உயிருக்கு போராடிய நிலையிலும் அவர் தல.. தல.. என்று சொல்லிக் கொண்டே இருந்தது சக ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உடனடியாக அருகிலிருந்த நண்பர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் இன்று காலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பரத் குமாரின் தந்தை ஜானகிராமன் நரம்பு தளர்ச்சியால் பாதிகப்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டவர். அதனால் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலையில், தாய் லலிதா வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

வீட்டுக்கு மூத்தவரான பரத்குமார் துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிபிஏ படித்து வந்தாலும் குடும்ப சூழல் காரணமாக இவர் இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் . இரவு நேரத்தில் வேலை செய்து விட்டு பகலில் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், முழுநேரமாக கிடைக்கும் வேலைகளை செய்து குடும்ப பாரத்தை சுமந்துள்ளார். இந்த நிலையில் அஜீத் படத்தை முதல் காட்சி பார்க்க 2500 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிச்சென்று விபரீதமாக பலியாகி உள்ளார்.

தன் கணவர் விஜய் ரசிகர், இவன் அஜீத் ரசிகர் ரெண்டு பேருமே போயிட்டாங்க என்ற அவரது சித்தி, இப்ப குடும்பத்துக்கு இருந்த ஒரே ஆதரவும் போயிருச்சி என்று வேதனை தெரிவித்தார்.

நடிகர்கள் யாரும் வரமாட்டார்கள், நண்பரின் குடும்பத்தை யார் பார்த்துகொள்வார்கள் ? என அவரது நண்பர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments