ஆமா வாரிசு படத்தில் பழைய படங்களின் சாயல் இருக்கு..! தில்லாக ஒப்புக் கொண்ட தில்ராஜூ
தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள் வெளியாவதால் விஜய்யின் வாரசூடு படத்தை 14 ந்தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக அறிவித்த தயாரிப்பாளர் தில்ராஜூ, வாரிசு படத்தில் பழைய தெலுங்கு படங்களின் சாயல் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் 11 ந்தேதி வெளியாக உள்ள நிலையில் , வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசூடு படம் 14 ந்தேதி வெளியாவதாக தயாரிப்பாளர் தில்ராஜூ அறிவித்துள்ளார் .
12 ந்தேதி பாலகிருஷ்ணாவின் படமும், 13 ந்தேதி சிரஞ்சீவி படமும் வெளியாவதால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தெலுங்கு திரையுலகின் நலன் கருதியும் , வாரசூடு படத்தை தள்ளி வைத்திருப்பதாக தில்ராஜூ கூறினார்.
வாரசூடு படம் அல வைகுண்ட புரம்லு, பிரம்மோற்சவம் போன்ற ஏற்கனவே வந்த தெலுங்கு படங்களின் கலவையான மிக்சர் பொட்டலம் என்று கூறப்படுகின்றதே என்று செய்தியாளர் கேட்டதற்கு, ஆமாம் , காட்சிகள் பழைய படங்கள் போல இருந்தாலும் டான்ஸு, பைட்டு, செண்டிமெண்டு உள்ளிட்ட பேக்கேஜ் மற்றும் படத்தின் முக்கிய காட்சி தான் படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்றார் தில்ராஜூ.
வாரசூடு படத்தை தள்ளி வைத்ததன் மூலம் தில்ராஜ் என்ற பிராண்டுக்கு முதல் தோல்வி ஏற்பட்டதாக எடுத்துகொள்ளலாமா ? என்ற கேள்விக்கு , இது தோல்வி அல்ல , சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்டது , இரு படங்களுடன் வெளியிட்டால் யாருக்கு பாதிப்பு ? என்பதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த தில்ராஜூ, லவ் டுடே, காந்தாரா ஆகிய படங்களைப் போன்று தெலுங்கில் வாரசூடு வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Comments