பட்டு சேலைகள் வாங்கி கைத்தறி நெசவாளர்களிடம் பணம் தராமல் மோசடி தொடர்பாக பெண் ஒருவர் கைது..!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவைகளை வாங்கி பணம் தராமல் ஏமாற்றியது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவிட்டுப்பாளையத்தில் கைத்தறி பட்டுசேலை மொத்த வியாபாரம் செய்து வரும் லட்சுமணன் என்பவரை கோவையை சேர்ந்த சுஜாதா, சேலத்தை சேர்ந்த ரவி ஆகியோர் ஜவுளிக் கடை வைத்துள்ளதாக கூறி அணுகி மொத்தமாக பட்டு சேலைகளை கொள்முதல் செய்து, அதற்கான பணத்தை முறையாக கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் என்றுகூறி குமார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்த சுஜாதா, வியாபாரத்துக்கு பட்டு சேலைகள் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
லட்சுமணன் மற்றும் மற்ற நெசவாளர்களிடம் பட்டு சேலைகளை வாங்கி 4 பேரும் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால், ஏமாற்றமடைந்த நெசவாளர்கள், நால்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகாரளித்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்தி, மோசடி நடைபெற்றதை கண்டுபிடித்து சுஜாதாவை கைது செய்து, தலைமறைவாக உள்ள 3பேரை தேடி வருகின்றனர்.
Comments