ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்

0 2858

நடப்பாண்டில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்  தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் துணைக்கோள் நகரம், மார்ச் மாதம் புதுமைத்திறன் உச்சிமாநாடு UMAGINE உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. 

 தமிழ்நாடு சட்டப்பேரவையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் அமளிக்கு இடையே, தனது உரையை தமிழில் தொடங்கினார்.

புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்து, பின் தொடர்ந்து ஆங்கிலத்தில் தனது உரையை ஆளுநர் வாசித்தார்.

தமிழகத்தை தமிழ்நாடு என ஆளுநர் குறிப்பிட வலியுறுத்தி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்ட திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், தமிழ்நாடு வாழ்கவே என கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.

தனது உரையை தொடர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும், 1,500 கோடியில், நீர்வள ஆதாரங்களை பெருக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 15 ஆயிரம் கோடி மதிப்பில், 103 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என குறிப்பிட்ட ஆளுநர், தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மினி டைடல் பார்க்குகள் தொடங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மதுரையில் ரூ.600 கோடியில் ஐடி பார்க் நிறுவப்படும் என்றும், வரும் மார்ச் மாதம், முதன்முறையாக சென்னையில், உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைத்திறன் உச்சிமாநாடு UMAGINE நடைபெறவுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 500 மின்சார பேருந்துகளும், மூவாயிரத்து 213 பிஎஸ் 6 ரக பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், மாமல்லபுரத்தில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் எனவும், 9,588 கோடி மதிப்பீட்டில், 20,990 கிலோ மீட்டர் நீள நகர்ப்புற சாலைகள் அமைக்கும் பணி மாநிலம் முழுவதும் நடைபெறுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

“நம்ம பகுதி, நம்ம நியாய விலைக்கடை” திட்டத்தின் கீழ், இதுவரை நான்காயிரத்து 455 பொது விநியோகக்கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 232 மீனவர்கள், தமிழ்நாடு அரசின் முயற்சியால், மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments