ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 18 மாத குழந்தையின் உறுப்புகள் தானம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 2 பேரின் உயிரை காப்பற்றிய நிலையில், அக்குழந்தை தமிழகத்தின் இளம் உறுப்பு கொடையாளியாக இனம் காணப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தது. மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை கடந்த 5ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தது.
துக்கமான சூழலிலும் குழந்தையின் உறுப்புகளை தானமாக கொடுக்க பெற்றோர் ஒப்புக் கொண்டதை அடுத்து, குழந்தையின் கல்லீரல் மதுரையில் சிகிச்சை பெறும் 4 மாதக் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் சிகிச்சை பெறும் 19 வயது இளம்பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன், ஸ்டான்லி மருத்துவமனையில், இரண்டரை வயது குழந்தையின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதே, இதுவரை மிகக் குறைந்த வயது உறுப்பு கொடையாளராக கருதப்பட்ட நிலையில், தற்போது அந்த புகழ் ஒன்றரை வயதான ஆந்திர குழந்தையை சென்றடைந்துள்ளது.
Comments