ஏர் இந்தியா விமானத்தில் அநாகரிக செயல்.. நடுவானில் நடந்தது என்ன?

0 3857

நியூயார்க்கிலிருந்து, டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில், பயணித்த மூதாட்டி மீது, மதுபோதையில் சிறுநீர் கழித்த நபர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, நியூயார்க்கிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில், உயர்வகுப்பில் பயணித்த Wells Fargo என்ற அமெரிக்க நிதித்துறை சார்ந்த நிறுவனத்தின், இந்தியாவின் துணைத்தலைவராக இருந்த ஷங்கர் மிஷ்ரா என்பவர் பயணித்தார்.

மதிய உணவு வழங்கப்பட்ட பின்னர், தனது இருக்கையிலிருந்து மதுபோதையில் எழுந்த ஷங்கர் மிஷ்ரா, அதே வகுப்பில் பயணித்த மூதாட்டி மீது சிறுநீர் கழித்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மூதாட்டி அதிர்ச்சியடைந்த நிலையில், அவரது ஆடைகள், உடமைகள், பாஸ்போர்ட் உள்பட பயண ஆவணங்கள் வைத்திருந்த பை நனைந்ததாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வந்த விமானப்பணியாளர்கள், மூதாட்டியின் உடமைகளில் கிருமி நாசினியை தெளித்ததுடன், அவரை அழைத்து சென்று, மாற்று உடைகளை வழங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு, தனக்கு இருக்கையை மாற்றி தர மூதாட்டி கோரிக்கை விடுத்த நிலையில், உயர் வகுப்பில் இருக்கைகள் இல்லை என பணியாளர்கள் பதிலளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சக பயணி ஒருவர், முதல் வகுப்பில் இருக்கை காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி, மூதாட்டிக்கு அங்கு இருக்கைகள் வழங்க வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 நிமிடங்கள், நின்றபடியே மூதாட்டி பயணித்த நிலையில், பின்னர் விமானப்பணிப்பெண் அமரும் சிறிய இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டு, சுமார் 2 மணி நேரம் அதில் அமர்ந்து மூதாட்டி பயணம் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் ஷங்கர் மிஷ்ரா, மூதாட்டியிடம் மன்னிப்பு கோர விரும்பியதாக விமான பணியாளர்கள் தெரிவித்த நிலையில், அதற்கு ஷங்கருடன் பேசவும், அவரது முகத்தை பார்க்கவும் விரும்பவில்லை என மூதாட்டி மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஷங்கர் மிஸ்ராவை, மூதாட்டியின் விருப்பத்திற்கு மாறாக,பணியாளர்கள் அழைத்து வந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்போது ஷங்கர் மிஷ்ரா, மூதாட்டியிடம் மன்னிப்பு கோரி, தன் மீது புகாரளித்தால், தனது மனைவி, குழந்தை பாதிக்கப்படுவார்கள் என கெஞ்சியதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானக்குழுவினர், மோதலை தவிர்த்து, வழக்கு பதியாமல் சமாதானமாக செல்ல தன்னை வற்புறுத்தியதாகவும், மூதாட்டி கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளுதல், மதுபோதையில் பொது இடத்தில் தவறாக நடத்தல் உள்பட 4 பிரிவுகளில், ஷங்கர் மிஷ்ரா வழக்கு மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் கைதான ஷங்கருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக Wells Fargo நிறுவனம், ஷங்கர் மிஷ்ராவை வேலையிலிருந்து பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments