ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியவர்களை கதறவிட்ட ஆபாச கும்பல்..! திருப்பூரில் தட்டி தூக்கியது போலீஸ்

0 4564


தமிழகத்தில் செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து பணம் செலுத்திய பின்னரும் அவர்கள் வீட்டு பெண்களின் படத்தை மார்பிங் மூலம் ஆபாச சித்தரித்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கொள்ளை கும்பல் திருப்பூர் காதர் பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை சேர்ந்த பெண் ஒருவர் , செல்போன் கடன் செயலி மூலம் பணம் பெற்ற தன்னிடம் அதிக பணத்தை பறிப்பதற்காக தனது வீட்டு பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து செல்போனில் உள்ள மற்றவர்களின் எண்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைத்து அவமானப்படுத்தி மிரட்டல் விடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயிடம் புகார் தெரிவித்தார்.

சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி தலைமையில் தனிப்படை மிரட்டல் கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் பேரில் அந்தத குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணின் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கும்பல் திருப்பூர் காதர்பேட்டையில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி வருவது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

காதர்பேட்டையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் கால்சென்டர் அமைத்து கடன் செயலி மூலம் மோசடியாக மிரட்டி பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்தனர். கேரள மாநில கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது அஸ்கர் , முகமது ஷாபி ,முகமது சலீம், அனிஸ்மோன் , அஷ்ரப் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க பயன்படுத்திய 6 இணையதள மோடம், 3 லேப்டாப்கள், ஒரு பாக்சில் 100 சிம்கார்டுகள் கொண்ட 11 சிம் பாக்ஸ்கள், கூடுதலாக 500 சிம்கார்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் காதர்பேட்டையில் கால்சென்டர் அமைத்திருந்த அவர்கள் ஒரு நாளைக்கு 3500 பேரை தொடர்பு கொண்டு இவர்களுக்கு ஸ்பீடு லோன், கேண்டி பே, ஈஸி லோன், லக்கி மணி என்ற நான்கு வெளிநாட்டு கடன் செயலி மூலம் ரூ.3000 முதல் ரூ.15000 வரை கடன் வழங்குவதாக கூறியுள்ளதுடன், இதற்காக இ.மெயில் முகவரி, ஆதார் கார்டு எண், புகைப்படம் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். பணம் தேவைப்பட்டவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியாமல் தங்களது ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர்.

அப்படி கடன் பெற்றவர்கள் கடனை 2 வாரத்தில் செலுத்தியும், அனுப்பிய பணம் எங்களது வங்கி கணக்கிற்கு வரவில்லை. எனவே பணத்தை திரும்ப அனுப்புங்கள். இல்லையென்றால் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து உங்களது உறவினர்கள், நண்பர்களின் வாட்ஸ்அப் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் பலர் மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். அதன் பின்னரும் கடன் செலுத்தியவர்களை அசிங்கப்படுத்தி பணம் பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கும்பல் கடந்த 2 மாதமாக பணம் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இந்த மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயி , பொதுமக்கள் ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் என்றும் அப்படி யாராவது போன் செய்தால் 1930 என்ற போன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments