பழவந்தாங்கல் தெரியும்.. பாட்டில் தெரு தெரியுமா..? திறந்த வெளி மது‘பார்’..! அச்சத்தில் பெண்கள்..!
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்திற்கு வெளியே நடைமேடை வாசலில் செயல்படும் மதுக்கடைக்கு வரும் குடிகாரர்கள், வீதியில் அமர்ந்து குடித்து விட்டு அங்கேயே பாட்டில்களை வீசி செல்வதால், ரெயிலில் இருந்து இறங்கிச்செல்லும் பெண்கள் அச்சத்துடன் கடந்துசெல்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்...
சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழவந்தாங்கல் தெரியும்.. பாட்டில் தெரு தெரியுமா..? அதுவும் அதே பழவந்தாங்கலில்தான் உள்ளது...
பழவந்தாங்கல் ரயில் நிலையம் செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் வெளியே, சாலையை ஆக்கிரமித்து குட்டிசுவர் ஓரத்தை திறந்தவெளி மதுபார் போல பயன்படுத்தும் குடிமகன்களின் கைங்கர்யத்தால் வீதியில் எங்கெங்கு நோக்கினும் காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன.
ஏதோ டீக்கடைகளில் அமர்ந்து தேனீர் அருந்துவதுபோல, பப்ளிக்காக அமர்ந்து அளவெடுத்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறினால் தங்களுக்குள்ளேயே பாட்டிலை தூக்கி அடிக்கும் அளவுக்கு ரகளைகளும் அரங்கேறுவதால், ரயில்வே நிலைய சாலை, பாட்டில் தெருவாக தற்போது உருமாறி உள்ளது.
இதனால் பழவந்தாங்கல் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லக்கூடிய பள்ளி - கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் இளம் பெண்கள், தாய்மார்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் தினம் தினம் அச்சத்துடனேயே இந்த சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு இரவில் வருவதே கஷ்டமாக இருப்பதாகவும். இதற்கு ஒரு விடிவு காலம் வந்தால் நன்றாக இருக்கும் என்றும். சில பெண்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
அந்த சாலையில் இருந்து மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது சாலையில் அமர்ந்து குடித்து அலம்பல் செய்யும் போதையர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு....
Comments