ஈஷா மைய பயிற்சிக்கு வந்து மாயமான இளம்பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!
கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்குச் சென்று மாயமான இளம்பெண்ணின் உடல், 20 நாட்களுக்குப் பின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிகுமார் என்பவரது மனைவி சுபஸ்ரீ கடந்த மாதம் 11ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார்.
பின்னர் பயிற்சி முடிந்த நிலையில் மனைவி சுபஸ்ரீ யை அழைத்து செல்ல 18ம் தேதி அவரது கணவர் ஈஷா மையத்திற்குச் சென்றபோது அங்கிருந்து அவர் மாயமானது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுபஸ்ரீ சாலையோரம் ஓடி செல்வது பதிவாகி இருந்தது.
இது குறித்து பழனிக்குமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுபஸ்ரீ யை தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டெடுத்தனர்.
அந்த சடலம் சுபஸ்ரீ யாக இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் பழனிகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர் விரைந்து வந்து சடலத்தை பார்த்து சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து சுபஸ்ரீ யின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments