புதிதாய்ப் பிறந்தது 2023 ஆங்கிலப் புத்தாண்டு..!
நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டங்களுடன் 2023- ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் பெரும் திரளாக ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர்.
நாடு முழுவதும் மாலைமுதலே புத்தாண்டு உற்சாகம் களைகட்டத் தொடங்கியது. வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை ரிசாட்கள், சுற்றுலாத் தலங்களில் பெரும் திரளாக மக்கள் கூடினர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் உற்சாகம் கரைபுரண்டது..
ஹேப்பி நியூ இயர் என உற்சாக முழக்கத்துடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்
சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மணிக்கூண்டு அருகே ஏராளமானோர் திரண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனர். வாணவேடிக்கைகளைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.
தனியார் விடுதிகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். புத்தாண்டு பிறந்ததும் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
புத்தாண்டையொட்டி கிறித்துவ தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்றன.
கடந்த ஆண்டின் இனிய நினைவுகளோடு புத்தாண்டு புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ள நிலையில் , மக்கள் மனங்களில் அளவற்ற உற்சாகம் விடிய விடிய கொண்டாட்டமாக கரைபுரண்டுள்ளது.
Comments