நாகப் பாம்பு கடிக்கு செவிலியர்கள் சிகிச்சை சிறுமி பலியான சோகம்..! அரசு மருத்துவமனையின் அலட்சியம்
காரைக்குடி அருகே வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை, பாம்பு கடித்த நிலையில் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் சிறுமி உடலில் விஷம் ஏறி பரிதாபமாக பலியானதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
காரைக்குடி பேருந்து நிலையத்தை அடுத்த சேர்வாஊரணி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வம் - அமுதா தம்பதியின் 10 வயது மகள் ஓவியா.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தரையில் படுத்து தூங்கும் பொழுது பாம்பு ஒன்று சிறுமி ஓவியாவின் கையில் இரண்டு முறை கடித்து உள்ளது. இரவு 12 மணிக்கு வலியால் துடித்த சிறுமி தனது தாயை எழுப்பி ஏதோ கடித்து விட்டது என்று கூற, சிறுமியின் தாய் எழுந்து பார்த்த பொழுது இருட்டுக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது .
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி பத்தே நிமிடத்தில் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு தனது மகளை கொண்டு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவர் தூக்கத்தில் இருந்த நிலையில் அங்கிருந்த நர்ஸை எழுப்பி நடந்த விவரத்தை கூறி உள்ளனர். சிறுமியின் தாயிடம் கடித்தது என்ன பாம்பு ? என்று நர்சு கேட்டதாக கூறப்படுகின்றது.
பாம்பு பெயர் தெரியவில்லை என்றதால் வீட்டில் எங்காவது கிடக்கும் தேடிப்பாருங்கள் என்றும் கையில் உள்ள காயத்தை வைத்து பார்க்கும் போது தண்ணீர் பாம்பு போல உள்ளது என்று கூறி ரத்தத்தை எடுத்து ஆய்வுக்கு வைத்துள்ளார்.
பாம்பு கடித்த தனது மகளுக்கு விஷமுறிவு மருந்து கொடுக்காமல் டிரிப்ஸ் மட்டும் ஏற்றியதாகவும் தனது மகள் இரு முறை வாந்தி எடுத்த நிலையில் செவிலியர்கள் ஒரு முறை வந்து ஊசி செலுத்தியதாகவும் அதன் பின்னர் , தங்கள் மகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறுதியில் தங்கள் மகள் உயிரிழந்துவிட்டதாக அமுதா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மருத்துவர் வந்து பார்த்திருந்தால் கூட என் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் மருத்துவர் இல்லை என்றால் வேறு எங்காவது போயிருபோம் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் தங்கள் குழந்தை பலியானதாக தாய் அமுதா வேதனை தெரிவித்தார்.
என் குழந்தை உயிரிழந்து விட்டதாக தகவல் சொல்லப்பட்டதுமே மயங்கி விழுந்து விட்டேன் என்றார் சிறுமியின் தந்தை செல்வம்.
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments