புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு QR கோடு மூலம் வாகன வசதி.. விபத்தை தடுக்க போலீஸ் ஏற்பாடு
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், உபர் நிறுவனத்தின் QR கோடு மூலம் வாகனங்களை முன்பதிவு செய்து வீட்டுக்கு செல்ல, சென்னை காவல்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மித மிஞ்சிய போதையில் வாகனம் ஓட்டுவோரால் நிகழும் வாகன விபத்துக்களை தவிர்க்க, சென்னை பெருநகர காவல்துறை சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
குடிபோதையில் வாகன ஓட்டுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ள சென்னை காவல்துறையினர், மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வோர், வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையிலும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து நள்ளிரவில் முதியோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லும் வகையிலும், உபர் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்த உள்ளது.
அதன்படி, உபர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள QR கோடு நட்சத்திர ஓட்டல்களிலும், போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நகரின் முக்கிய இடங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும்.
வாகன வசதி தேவைப்படுவோர் அந்த QR கோடை தங்கள் செல்போனில் ஸ்கேன் செய்தால்போது, தானாக அது ஊபர் ஆப்பிற்கு சென்று, வாகனங்கள் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தித்தரும் என தெரிவித்துள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உபர் நிறுவன விளம்பர யுக்தி அல்ல என்றும் தெரிவித்தார்.
Comments