ரூ 4 லட்சம் பணத்துக்காக உரிமையாளரை குத்திக் கொன்ற வடமாநில ஊழியர்..! சிசிடிவி காட்சி வெளியானது
சேலம் இரும்புக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி 4 லட்சம் ரூபாயை பறித்துச்செல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் உரிமையாளரை கொலை செய்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சேலம், தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தோஷ், பிரேம்குமார் ஆகியோர் இரும்புக்கடை நடத்திவந்தனர்.
இந்த கடையில் குறைந்த சம்பளத்துக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சோபித் என்ற இளைஞரும், 15 வயது சிறுவனும் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று இரவு கடை உரிமையாளர்களான சந்தோஷ், பிரேம் குமார் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு, 4 லட்சம் ரூபாய் வசூல் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.
அப்போது வடமாநில ஊழியர்களில் ஒருவன், சந்தோஷ்குமாரை விரட்டி விரட்டி கத்தியால் சரமாரியாக தாக்கினான். அவர் ஹெல்மெட்டால் அவனை தாக்கி, விரட்ட முயன்றார்
அவரை காப்பாற்றச்சென்ற பிரேம்குமாரை, மற்றொரு இளைஞன் தாக்க முற்பட்டபோது, சுதாரித்துக் கொண்ட அவர், பெரிய கல்லை எடுத்து இளைஞனை நோக்கி எறிந்ததால், அவன் அங்கிருந்து ஓடினான்
சந்தோஷ் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்ததால் மயங்கி சரிந்து, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து, கத்தியுடன் நின்ற வட மாநில ஊழியர்களை மடக்கிப்பிடித்தனர். உயிருக்கு போராடிய சந்தோஷை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையாளிகள் இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தங்களுக்கு சம்பளம் வழங்காததால் கொலை செய்ததாக கைதான இளைஞர்கள் வாக்குமூலம் அளித்ததாக, போலீசார் தெரிவித்த நிலையில், பேசியபடி முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவித்த உரிமையாளர் பிரேம்குமார், வியாபாரப் பணம் நான்கு லட்சம் ரூபாயை பறிக்கும் நோக்கிலேயே, திட்டமிட்டு இந்த கொடூர கத்திக் குத்து தாக்குதலை அவர்கள் நடத்தியதாக தெரிவித்தார்.
வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில், கடையின் உரிமையாளரை கொடூரமாக கொலை செய்து பணம் பறிப்பில் ஈடுபட முயன்று, வட மாநில ஊழியர்களின் அட்டகாசம் செய்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments