ஹிஜாவு என்ற நிறுவனம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி.. பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்..!
ஹிஜாவு என்ற தனியார் நிறுவனம் பண மோசடி செய்ததாக கூறி, சென்னை எழும்பூரில் ஏராளமானோர் கொட்டும் மழையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்நிறுவனம், வாடிக்கையாளர்கள் ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால், அதை தாங்கள் மலேசியாவில் எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்து, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிறுவனத்தில், தமிழகத்தில் இருந்து மட்டும், 1 லட்சத்து 25 ஆயிரம் பேர், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததாகவும், ஆரம்பத்தில் சிலருக்கு வட்டி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திடீரென வட்டி வருவது நின்று போன நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நிறுவனமும் மூடப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் சவுந்தராஜன், அவரது மகன் அலெக்ஸ்சாண்டர் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், இருவர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
Comments